தமிழ் மாத தேதிகளை நிரந்தரமாக்க வேண்டும்
தமிழ் மாத நாட்களின் எண்ணிக்கை நிரந்தரமாக இல்லாமல் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டிருக்கிறது. நாட்களின் எண்ணிக்கை 29, 30, 31, 32 என பலவாறாக இருக்கிறது. தமிழ் வைகாசி மாதம் சில வருடங்களின் 31 நாட்களும் சில வருடங்களில் 32 நாட்களும் இருக்கும். மார்கழி, தை சில வருடங்களில் 29 நாட்களும் சில வருடங்களில் 30 நாட்களும் இருக்கும். எந்த வருடம் எந்த மாதம் எத்தனை நாட்கள் என கண்டுபிடிக்க எளிய வழிமுறை இல்லை. பஞ்சாங்க ஆசிரியர்கள் எதிர்வரும் ஒரு வருடத்திற்கான பஞ்சாங்கம் கணித்து அதில் ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள், எப்போது ஆரம்பிக்கிறது என்று முடிவு செய்து பஞ்சாங்க புத்தகம் வெளியிட்ட பிறகு தான் பொதுமக்கள் தெரிந்து கொள்ளமுடியும். அதுவும் வாக்கிய பஞ்சாங்கம் வெளி வந்த பிறகு தான் தெரிந்து கொள்ளமுடியும். அதற்கு முன் தமிழ் நாடு அரசாங்கம் கூட சுயமாக தெரிந்து கொள்ள முடியாது. வாக்கிய பஞ்சாங்க விவரங்கள் கணக்குகள் எல்லாம் பரம்பரை ரகசியம். இப்படி நாட்களின் எண்ணிக்கையும் மாதம் ஆரம்பிக்கும் நாளும் மாறுவதால் நமது பண்டிகைகள் எப்போது வரும், எந்த கிழமையில் வரும் என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிவதில்லை.
தமிழ் வருட, மாத முறை என்பது சௌரமானம் என்கிற சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட முறை. ஒரு வருடம் என்பது எத்தனை நாட்கள், மணி, நிமிடம், நொடிகளை கொண்டது என துல்லியமாக அறிவிக்கும் உலகின் தலைசிறந்த கணித முறை. உலகிலேயே இயற்கையை அடிப்படையாக கொண்ட சரியான வருட முறை. சூரியனின் இயக்கம், கிரகங்களின் சுற்று பாதை, வேகம், நட்சத்திர கூட்டங்களின் அமைப்பு, அவைகளுடன் சந்திரனின் தொடர்பு போன்றவைகளையும் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்ட, மேம்பட்ட கணித முறை. சூரியன் வான்வெளியில் சுற்றி வரும் கால அளவை கொண்டு கணிக்கப்படுவது. பூமி தான் சூரியனை சுற்றுகிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன் சுற்றுவதாக தெரிகிறது. கிரகங்கள் சுற்றி வரும் நீள்வட்ட பாதையை 12 பாகங்களாக பிரித்து ராசி மண்டலங்கள் என பெயரிட்டு உள்ளார்கள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஒரு மாதம். மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரத்தை கணக்கிட்டு அது முதல் ரிஷப ராசியில் நுழையும் வரை உள்ள கால கட்டம் ஒரு மாதம். அதன் பெயர் சித்திரை. ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் காலம் வைகாசி. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலம் மாறுவதால் ஒவ்வொரு மாத நாட்களின் எண்ணிக்கையும் மாறுகிறது. அது இயற்கை. ஆனால் சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாறுவது காலையிலும் நடக்கலாம், மாலையிலோ, இரவிலோ நடக்கலாம். அதனால் அந்த மாத தொடக்கம் என்றைக்கு என முடிவு செய்வதற்கு ஒரு விதிமுறையை வகுத்தார்கள். அதாவது சூரியன் அன்று அஸ்தமனத்திற்கு (பகல் அகஸ்) அதாவது சூரியன் மறைவுக்கு முன்பே ராசி மாறினால் அன்றே அந்த மாதத்தின் முதல் நாள் என்றும் அஸ்தமனத்திற்கு பிறகு ராசி மாறினால் (ஸங்கரமனம்-சங்கராந்தி) அடுத்த நாள் தான் அந்த மாதத்தின் முதல் நாள் என்றும் முடிவு செய்து பஞ்சாங்கத்தில் அறிவிக்கிறார்கள். வருட ஆரம்பமும் அப்படித்தான். சில வருடங்களில் தமிழ் புத்தாண்டு பிறப்பு ஏப்ரல் 14ஆகவும் சில வருடங்களில் ஏப்ரல் 15 ஆகவும் இருக்கும். 2047 வரை ஏப்ரல் 14 தான். பிறகு மாறி மாறி வரும். ஒவ்வொரு வருடமும் சங்கராந்தி முன் பின் மாறுவதால் அந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் எப்போது சூரியன் மாறுகிறார் என்று பார்த்தால் தான் வருட தொடக்கம், மாத தொடக்கம் எப்போது, அந்த வருடத்தில் மொத்த நாட்கள் எத்தனை, ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் என்று தெரியும். அதை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியாது. அதன் அடிப்படையில் விரதங்கள், பண்டிகைகள் எல்லாம் எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்ளவும் முடியாது.
ஆங்கில காலண்டர் போல தமிழில் நிரந்தர காலண்டர் இல்லை. இப்போது சில வெப்சைட்டுகளிலும் ஆப்ஸ்கள் மூலமாகவும் பார்ப்பதெல்லாம் திருக்கணித முறையிலானவை. உதாரணமாக 2026ல் தைப்பொங்கல், தை முதல் தேதி எது என்று பார்த்தால் அவைகளில் ஜனவரி 14 என்று காட்டும். ஆனால் நடைமுறையில் உள்ள வாக்கியப்படி அது ஜனவரி 15. தமிழ் காலண்டரை கம்ப்யூட்டர்களிலும் ஆப்ஸ்களிலும் ஸ்மார்ட் வாட்ஸ்களிலும் பயன்படுத்த முடியாத நிலையே இப்போது இருக்கிறது. ஆங்கில தேதிகளுடன் ஒத்துப்போகாத நிலையும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆங்கில தேதிப்படி எதிர்கால தமிழ் தேதியை கண்டுபிடிக்க முடியாது. விரதங்கள், பண்டிகைகளையும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் தமிழ் மாத நாட்கள் எண்ணிக்கை நிரந்தரமாக இல்லாதது ஒரு காரணம். சூரிய சங்கராந்தி அடிப்படையில் வருடாவருடம் மாறுகிறது. அதனால் ஆங்கில தேதிப்படி மாறி மாறி வருகிறது. அப்படி இல்லாமல் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் நிரந்தரமாக இத்தனை நாட்கள் தான் என்று நிர்ணயித்துவிட்டால் இந்த குழப்பங்கள் நீங்கிவிடும்.
தமிழ்நாட்டிக்கு வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் மையமான ஒரு நகரத்தின் சூரிய உதய அடிப்படையில் சூரிய சங்கராந்தி நாழிகையை முடிவு செய்யலாம். (உதாரணமாக திருச்சி). அதன்படி சூரியன் ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவின் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்தின் நாட்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம். அதாவது சூரியன் ஒரு ராசியை கடக்க அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் ஐந்து மாதங்கள் 31 நாட்கள் என்றும் மற்ற ஏழு மாதங்கள் 30 நாட்கள் என்றும் நிர்ணயம் செய்யலாம். அவைகளை நிபுணர்கள் குழு முடிவு செய்யலாம். அப்படி செய்யும் போது சூரிய சங்கராந்தி பெரிய அளவில் தள்ளிப் போகாது. அந்த மாத ஆரம்ப நாளின் காலையிலோ, மாலையிலோ, இரவிலோ தான் வரும். வருடத்திற்கு (12 மாதங்களுக்கு) 365 நாட்கள் கிடைத்து விடும். 3 வருடம் கழித்து நான்காவது வருடம் ஒரு நாளை கூட்ட வேண்டியது அவசியம். அதற்கு நான்காவது வருடத்தில் சங்கராந்தி மிகவும் தள்ளி போகிற மாதத்தில் ஒரு நாளை கூட்டிக் கொள்ளலாம். ஆங்கில லீப் வருடம் போல. அதையும் ஆங்கில லீப் வருடம் வருகிற வருடத்துடன் ஒத்து போகிற வருடத்தில் பிப்ரவரிக்கு இணையான தமிழ் மாசி மாதத்தில் ஒரு நாளை கூட்டிக் கொள்ளலாம். அப்படி செய்துவிட்டால் எக்காலத்திலும் ஆங்கில தேதிகளும் தமிழ் தேதிகளும் ஒத்திசைந்து போய்விடும். நமது பாரம்பரியத்தையும் சௌரமான தமிழ் மாத முறையையும் பெரிய மாற்றம் இல்லாமல் காப்பாற்றவும் தேதிகளை ஒழுங்குபடுத்தவும் முடியும். நவீன பயன்பாடுகளுக்கு சிறப்பாக எளிமையாக இருக்கும். கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஆப்ஸ், சமூக ஊடகங்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற அனைத்திலும் தமிழ் மாத தேதி முறையை பயன்படுத்தலாம். உலக அளவில் தமிழையும் தமிழ் வருட, மாத முறையின் சிறப்பையும் தமிழ் கலாச்சாரத்தையும் பரப்பலாம். எதிர்காலத்தில் எந்த வருடம் எந்த தமிழ் தேதிக்கும் சரியான ஆங்கில தேதி கண்டுபிடிக்க முடியும். அதே போல ஆங்கில தேதிக்கு சரியான தமிழ் தேதி கண்டுபிடிக்கலாம். நமது விரதங்கள், பண்டிகைகள் எந்த வருடத்திற்கு வேண்டுமானாலும் எப்போது வருகிறது என்று முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.
இந்திய ஒன்றிய அரசு Ministry of Earth Sciences, India Meteorology Department, Meteorology Positional Astronomy Centre கொடுக்கும் புள்ளி விவரங்கள் மூலம் நிபுனர் குழு அமைத்து பஞ்சாங்கம் தயாரித்து ராஷ்ட்ரீய பஞ்சாங்கம் என்ற பெயரில் தமிழ் உள்பட பல மொழிகளில் 1957 முதல் வெளியிடுகிறது. அதை இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்தலாம். அது 2004 முதல் சாயன, நிரயண என்ற இரண்டு விதமான காலண்டர் முறையில் வெளிவருகிறது. அந்த பஞ்சாங்கத்தில் மாதங்களின் ஆரம்பத்தையும் நாட்களின் எண்ணிக்கையையும் ஒழுங்குபடுத்தி நிரந்தரமாகவும் மாறாததாகவும் செய்து இருக்கிறார்கள். பல சீர்திருத்தங்களும் செய்யப்பட்டு உள்ளன.
ஆனால் அது சந்திரனின் இயக்கத்தை (திதிகள்) அடிப்படையாக கொண்ட சாந்திரமான முறை. அதில் வருட நாட்களின் எண்ணிக்கை குறைவு. 12 மாதங்கள் கொண்ட ஒரு வருடம் என்பது 354 நாட்கள் தான். அதை 12 மாதம் ஒரு வருடம் என்று அப்படியே பின்பற்றினால் 15 வருடத்திற்கு பிறகு பருவ காலங்கள் தலைகீழாக மாறிவிடும். வருடத்திற்கு 12 நாட்கள் குறைவதால் 15 வருடத்தில் 180 நாட்கள் அதாவது 6 மாதங்கள் குறைந்து கோடையில் மழை கொட்டும். மழை காலத்தில் மழை இல்லாமல் கோடையாகி பூமி வரண்டு போகும். ஆக சாந்திரமான 12 மாதம் சரியான வருட கணக்கு இல்லை. சௌரமானம் தான் 12 மாதங்கள் கொண்ட சரியான ஒரு வருடம். அதனால் தான் சௌரமானத்துடன் ஒத்து போவதற்காக சாந்திரமானத்தில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதத்தையே அதிக மாதம் என சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. சாந்திரமானம் என்பது மனிதன் ஆதிகாலத்தில் வானியல் ஆய்வில் பெரிய வளர்ச்சி பெறாத காலத்தில், சூரியன் மற்ற கிரகங்களின் இயக்கத்தை பற்றி அதிகம் அறியாத காலத்தில் சந்திரனின் இயக்கத்தை மட்டும் கவனித்து உருவாக்கியது.
தமிழ்நாடு அரசு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பஞ்சாங்க ஆசிரியர்கள் மட்டுமின்றி வானியல் வல்லுநர்கள், வானியல் கணித வியலாளர்கள், ஜோதிட மேதைகள், ஜோதிட பல்கலைக்கழக பேராசிரியர்கள், தர்ம சாஸ்திர நிபுணர்கள், தேவையான துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழ்நாட்டிற்கென சௌரமான அடிப்படையில் தமிழ்மாத தேதிகளை மாறாத, நிரந்தரமானதாக ஆக்க வேண்டும்.