சிராத்த திதி
சிரார்த்த திதி என்பது மறைந்த நமது முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்வதற்கான திதியாகும். இது திதி நிர்ணய விதிப்படி நிர்ணயிக்கப்படுவது. மறைந்த பெற்றோரின் சிரார்த்த திதியானது அவர்கள் இறந்த ஆங்கிலத் தேதிக்கு சம்பந்தப்பட்டதல்ல. நமது இந்து ஆகம முறைப்படி தமிழ் தேதிகளும் திதியும் சம்பந்தப்பட்டதாகும். சௌரமான மாதங்களின்படி தமிழ்நாடு, கேரளாவிலும் சாந்திரமான மாதங்களின்படி ஆந்திரா, கர்நாடகாவிலும் (தெலுங்கு, கன்னடர்கள்) கடைபிடிக்கப்படுகின்றன. எனவே அவரவர் குல வழக்கப்படி சிரார்த்தங்களை கடைபிடிக்க வேண்டியது. சௌரமானக்காரர்கள் அவர்கள் இறந்த தேதி மணிக்கு தமிழ் சௌரமான மாதப்படி வளர்பிறையா அல்லது தேய்பிறையா, அதில் என்ன திதி என்று பார்க்க வேண்டும். அதுவே அவரது சிரார்த்த திதியாகும். அந்த திதி வருடா வருடம் அதே தமிழ் மாதப்படி எப்போது வருகிறதோ அன்றுதான் அவர்களுக்கான சிரார்த்தங்களை செய்ய வேண்டும். சாந்திரமானக்காரர்கள் சாந்திரமான மாதப்படி சுத்த அல்லது பகுள திதி என்ன என்று பார்த்து அந்த சாந்திரமான மாதப்படி எப்போது வருகிறதோ அப்போது செய்ய வேண்டும். அதிக சாந்திரமான மாதங்கள் சிரார்த்தம் செய்வதற்கல்ல. நிஜ சாந்திரமான மாதங்களில் மட்டும் செய்ய வேண்டும். இப்படி வருடா வருடம் செய்யும் சிரார்த்த திதிகளோடு மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை அன்று தர்பணம் செய்வது சிறப்பு. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய பட்ச அமாவாசை ஆகியவற்றிலாவது அவசியம் சிரார்த்தங்களை செய்யவேண்டும். சங்கராந்தி 12, அமாவாசை 12, வைதிருதி 12, வியாதீபாதம் 12, மனு 14, யுகாதி 4, மகாளயம் 16, அஷ்டகா 1, அன்வஷ்டகா 1, திஸ்ரோஷ்டகா 12 ஆக மொத்தம் 96. இவை ஷண்ணவதி சிரார்த்தம் எனப்படும். இந்த 96 தினங்களிலும் சிரார்த்தங்கள் செய்வது மேலும் சிறப்பு. அந்த சிரார்த்த தினங்கள் பஞ்சாங்கத்தில் விரதாதி விஷேசங்கள் நிர்ணய கட்டத்தில் காட்டப்பட்டுள்ளது.